மெளனகுரு நெறிப்படுத்திய -கூத்தும் பரதமும் ஆற்றுகைச் சுவையும் அரங்கியல் புரிதலும்-சு.சிவரத்தினம்

----------------------------------------------------------------------------------------
பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படும் 'அரங்க ஆய்வு கூடம்' தனது முதலாவது அரங்க நிகழ்த்துகையை பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களினால் நெறிப்படுத்தப்பட்ட கூத்தும் பரதமும் எனும் அரங்க ஆற்றுகையாக அளிக்கை செய்தனர்.அவ் ஆற்றுகை பற்ற்ய ஓர் அவதானிப்பு.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முத்தமிழ் விழா மட்டக்களப்பு லுஆஊயு மண்டபத்தில் இடம்பெற்றது. கலைநிகழ்ச்சிகள், கலைஞர் கௌரவம் என்று இடம்பெற்ற இவ் விழாவில் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்படும் 'அரங்க ஆய்வு கூடம்' தனது முதலாவது அரங்க நிகழ்த்துகையை பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களினால் நெறிப்படுத்தப்பட்ட கூத்தும் பரதமும் எனும் அரங்க ஆற்றுகையாக அளிக்கை செய்தனர். இது தொடர்பான எனது வெளிப்பாட்டினை ஆற்றுகைச் சுவை, அரங்கியல் புரிதல் எனும் தலைப்புகளில் எடுத்துக் கூறலாம் என நினைக்கின்றேன்
ஆற்றுகைச் சுவை
அரங்க அளிக்கையின் ஆரம்பம் தகதகதகதக 'தாதெய்யதாதாளாங்கு ததிங்கிணதொம்' எனும் தாளக்கட்டினை ஒருவர் மத்தளத்திலும் மற்றவர் மிருதங்கத்திலும் என மாறிமாறி தங்களுடைய வாத்தியங்களுக்கூடாக பேசிக்கொண்டு முடிய நிகழ்த்துகை ஆரம்பமானது.
பாரம்பரிய அரங்க அளிக்கையில் கட்டியக்காரன் நாடகத்தில் நடக்கப்போவதை முன்னறிவிப்பவனாக இடம்பெறுவான். ஆனால் கூத்தும் பரதமும் எனும் அரங்க ஆற்றுகையில் கட்டியம் மத்தளமும் மிருதங்கமும் அவற்றின் சமபங்கான பேச்சுமாகும். இவற்றின் நாத ஒலி எதிர்காலத்தில் கலையை செந்நெறி, நாட்டார் எனும் மேன்னிலைப்பட்ட அதிகாரத்துவ வகைப்பாட்டினை, அந்தப்பார்வை நிலையை, அவ்வாறான பயில்நிலையினை, அரங்க ஆற்றுகையினை விடுத்து உயர்வு தாழ்வற்ற கலை எனும் பொதுமைப்பாட்டினுள் வரும் பன்மைகளை உள்வாங்கி அதிகாரத்துவமற்ற ஒரு கலையாற்றுகைக்கான முன்னறிவிப்பாக அமைந்தது போல் தெரிகின்றது.
இதனைத் தொடர்ந்து இராமநாடகத்தில் வரும் 'திறத்த ராமர் வனத்தில் போற சிறப்பைப் பாரைய்யா' எனும் பாடலுக்கு இராமன், இலக்குமணன், சீதை ஆகியோர் பாடி, வடமோடி உருப்படியாகவும் பரதஉருப்படியாகவும் ஆடி, அபிநயம் புரிந்து அரங்க வெளியை பார்வையாளரின் மனக்கண்முன் வனமாகக் கொண்டுவந்தனர்.

இராமன் எல்லாச் சிறப்புக்களும் பொருந்திய நாயகன், ஒப்பீட்டு ரீதியில் ஆற்றுகையில் மற்றெல்லோரையும் விட இராமனுடைய ஆற்றுகை அந்த நாயகச்சிறப்பிற்கு பங்கம் இல்லாதவண்ணம் அமைதல் வேண்டும் ஆனால் இராமனை விட மற்றவர்களே ஆற்றுகையை சிறப்பாக செய்தார்கள். அதாவது இராமனின் ஆட்டமும் பாட்டும் இராமன் என என் உள்ளத்திலிருக்கும் விம்பத்தினை அசைக்கவில்லை. இதனால் நாயகன் ரசிகர்கள் மனதில் பெரிதளவுக்கு இடம்பிடிக்கமுடியாமல் போய்விட்டது எனலாம்.
சீதை ஒரு பக்குவமான பாத்திரம் என்பதை ஆடல் மொழிமூலம் வெளிப்படுத்தினார். இராமனிடம் பழங்கள் கேட்டு அதனைக் கழுவி உண்ணும் சஞ்சாரி பாவம் கவரும்படியாகவும் இந்தப்பாடலுக்குள் இந்தப்பாவமும் இருக்கிறதா என எம்மை விழியுயர்த்த வைத்தது.
நெறியாளர் தான் எடுத்த பாடலுக்குள் கட்டுப்பட்டு நிற்காது தன் கற்பனையாற்றலால் அதற்கப்பாலும் சென்று கூத்துப்பாடலுக்குள் இல்லாதிருக்கும் ஆனால் அரங்க வெளியில் சாத்தியமாகக் கூடிய சூழலையும், வாழ்க்கைநிலைமையினையும் நிகழ்த்துகையாக வழங்கிய போது அந்தப் பாடல் மேலும் காட்சிமயமான நாடகமாகியது. சீதையின் மூலம் இது அழகாக வெளிப்படுத்தப்பட்டது.
இலக்குமணனின் இளமையின் வேகமும் துடினத்தனமும் அரங்கிலிருந்து கண்ணை அகற்றமடியாமல் இருந்தது. அங்கசுத்தமான ஆடலும் தாளத்தீர்வையும் நிலைகளும் இலக்கமணனுக்கு ஆடிய கலைஞியின் அர்ப்பணிப்பினையும் பயிற்சியினையும் எடுத்துக்காட்டுவதோடு மதத்த இராவணனைக்கண்டு அவனுடன் நிகழ்த்தும் போரில் அவர் காட்டிய திறன்மிகுந்த ஆட்டம் மெச்சும்படியாக இருந்தது.
ஆற்றுகை முடிவில் பொருள் பழசாக இருந்தாலும் சுவை புதிதாய் இருந்ததும் அந்தச் சுவை ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருந்ததோடு பழமை புதுமையானதாய் வந்தபோது அது அளித்த ஆனந்தமும் சந்தோசமும் எமது மூதாதையர்களின் படைப்பும் உழைப்பும் காலத்தால், காலனித்துவத்தால், பூகோளமயமாதலால் எதுவும் செய்யமுடியாது எனும் நம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இருந்தது. இவ்வாறான பேராசிரியரின் முயற்சி பராட்டுக்குரியதொன்றாகும்.
அரங்கியல் புரிதல்
அரங்க அளிக்கை தொடங்குவதற்கு அரை மணித்தியாலம் முன்பே அவ்வரங்க அளிக்கை தொடர்பாக கூத்தும் பரதமும் என்று தலைப்பிட்டு அதன் பங்குபற்றுநர்களை அறிமுகப்படுத்தும் துண்டொன்று அரங்க ஆய்வுகூடக் கலைஞர்களால் வினியோகிக்கப்பட்டது.
சாதாரண ஒரு பார்வையாளன் நிலையில் கூத்தும் பரதமும்; என்பது இரு அரங்க அளிக்கை முறைகளைக்குறிக்கின்றது.
1. ஒருவர்ஃபலர் ஒரு அரங்கில் ஒரு பாடலுக்குஃஜதிக்கு கூத்தையும் மற்றவர் ஃமற்றவர்கள் அதே பாடலுக்குஃஜதிக்கு அல்லது வேறோர் பாடலுக்குஃஜதிக்கு பரதத்தையும் அளிக்கை செய்வது.
2. ஒருவர் பலர் ஒரு அரங்கில் ஒரு பாடலுக்கு ஜதிக்கு கூத்தையும் அடுத்தமுறை அவர்களே அதே பாடலுக்கு ஜதிக்கு அல்லது வேறோர் பாடலுக்கு ஜதிக்கு பரதத்தையும் அளிக்கை செய்வது.
19ம் திகதி அளிக்கை செய்யப்பட்டது 2வது வகைப்பட்டதாகும்.
ஆனால் சிறிது ஆழமான நோக்கு நிலையில் மேற்கூறப்பட்ட ஒரு பாடலுக்குஃஜதிக்கு கூத்தையோ அல்லது பரதத்தினையோ அளிக்கை செய்துவிட முடியுமா எனும் கேள்வி எழுகின்றது. ஏனெனில் ஒரு பாடலுக்கு ஆடுவதனை பரதம் என்று கூறுவது கிடையாது நடனம் என்றே அழைப்பர். அழைப்பிதழ்களில் நிகழ்ச்சிநிரல்களில் இதனைக் கண்டுகொள்ளமுடியும். இதற்குக்காரணம் பரதம் என்பது ஒரு நடன உருப்படி அல்ல அது பல நடனஉருப்படிகளின் முழு வடிவம் அதாவது அலாரிப்பூ தொடங்கி தில்லானா வரைக்குமான உருப்படிகளின் கோர்வையே பரதம் ஆகும். இதனால்த்தான் அழைப்பிதழ்களில் நடனம் என குறிப்பிடுகின்றனர்.

இதேபோன்றுதான் கூத்துமாகும் ஒரு கட்டியகாரன் ஆடலையோ அல்லது வீரன் ஆடலையோ கூத்தென்று அழைக்கமுடியாது. கூத்தென்பது கதைதழுவிவரும் ஆட்டம் என்பார் நச்சினாக்கினியார். இந்த ஆட்டம் பரதத்தைப்போல் பல நடன உருப்படிகளின் முழுவடிவமாகும். கட்டியகாரன் ஆட்டத்தில் தொடங்கி வரவாட்டம் கொலுவாட்டம் என்று கூத்தில் வருகின்ற அத்தனை ஆட்டங்களையும் சேர்த்த ஒரு மொத்;த முழுவடிவமே கூத்தாகும்.
பரதம், கூத்துத் தொடர்பான எமது நோக்கு நிலை இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இராமன் வனவாசம் செல்வதைக் கூறும் ஒரு பாடலுக்கான அளிக்கையினை பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் எவ்வாறு கூத்தும் பரதமும் எனப் பெயர் வழங்கினார் என்பது எம்மைச் சிந்திக்கவைக்கின்றது.
பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் ஈழத்து நாடக உலகிற்கு இந்த அரங்க அளிக்கையினூடாக அறிமுகமான ஒருவரல்ல. அவர் நாடக நடிகராகவும் நாடக நெறியாளராகவும்; நாடக ஆசிரியராகவும் நாடக ஆய்வாளராகவும் நாடக கற்பித்தல் பேராசியராகவும் என நாடகம் தொடர்பான அவருடைய ஈடுபாடு பன்முகத்தன்மை வாய்ந்ததாகும். இப்பன்முகப்பாட்டினூடாக ஈழத்தின் நவீன நாடக வரலாற்றில் தனக்கான ஒரு பாணியை உருவாக்கியவர்; என்பதை எவரும் மறக்கமுடியாது.
இந்தப்பின்னணியில்த்தான் இதனைப் புரிந்து கொள்ளவேண்டியதாயிருக்கின்றது. அவரால் எழுதி நெறிப்படுத்தப்பட்ட சங்காரம், நம்மைப்பிடித்த பிசாசுகள், மழை, சக்திபிறக்கிறது போன்ற நாடகங்களில் தேவையான இடங்களிலெல்லாம் கூத்தாட்டத்தினை கையாண்டிருக்கிறார். ஆனால் அந்த நாடகங்களை கூத்தும் நவீன நாடகமும் என்று அவர் அழைக்கவில்லை. கடைசியாக அவரால் நெறிப்படுத்துப்பட்ட அவருடைய இராவணேசனைக் கூட கூத்தென்று அழைக்காததையும் கவனித்தாகவேண்டும்.
நடன உருப்படிகளின் கோர்வையாக கூத்தைப் பார்ப்போமானால் இராவணேசன் குறிப்பிடக்கூடியளவு கூத்தின் நடன உருப்படிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கூத்து என்பதனைப் புரிந்துகொள்ளமுடியும்.
கூத்தை கூத்தல்லவென்றும் கூத்தல்லாததை கூத்தென்றும் கூறுகின்ற பேராசிரியரின் முரண்நிலை தெரியாத்தனத்தினாலோ அல்லது தன்னியல்பாகவோ ஏற்பட்ட ஒன்றல்ல. இது மட்டக்களப்பின் அரங்கியல் சமூகநிலைமையின் பாதிப்பின் வெளிப்பாட்டின் ஒரு பிரதிபலிப்பாகவே உணரமுடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் நாடகச்செயற்பாடுகளில் ஈடுபட்டபோது ஒரு கலைஞனுக்குரிய சுதந்திர படைப்பாற்றல் கொண்டவராக பேராசிரியர் இருந்துள்ளார் போல்த் தெரிகிறது. இதனால்த்தான் கூத்தின் ஆட்டங்களை தனது நாடகங்களில் தேவையான இடங்களிலெல்லாம் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது அங்கு அவர் கூத்தை பயன்படுத்துகிறார் என்று எவரும் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை முன்வைக்கவில்லை என்பதுடன் அவர் கூத்தாட்டங்களை பயன்படுத்தியதால் மட்டக்களப்பில் கூத்துக்கள் அழிந்துவிடவும் இல்லை. இந்தச் சுதந்திரமான அவரின் செயற்பாடு காரணமாக மௌனகுருப்பாணி எனப்படும் மரபுரீதியான ஆடலும் பாடலும் இணைந்த ஒரு தனித்துவமான அரங்கியல் போக்கை ஈழத்து நாடக உலகு கண்டது.
மட்டக்களப்பிற்கு 90 களில் வந்து அரங்கியல் செயற்பாடுகளில் ஈடுபட்டபோது மரபுவாதிகளிடமிருந்து முதலாவது எதிர்ப்பினை அவர் எதிர்கொள்ளவேண்டியேற்பட்டது. கண்ணகி குளிர்த்தியில் இது ஏற்பட்டது. பாரம்பரியமாக கண்ணகியம்மன் கோயிலில் கண்ணகியம்மன் குளிர்த்திற் சடங்கன்று பாடப்படும் பாடல்களை கண்ணகியம்மன் குளிர்த்திப்பாடல்கள் எனும் தலைப்பில் ஒரு அரங்க அளிக்கையாக மேற்கொண்ட போது முதல் எதிர்புக் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து பேராசிரியரின் ஒவ்வொரு அசைவும் மரபு பேண்வாதிகளாலும் இயக்கவியல் தன்மையற்ற சுதேசிய நவீனவாதிகளாலும் மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு விமர்சிக்கப்ட்டே வருகின்றது.
ஒரு கலைஞனின் படைப்பாக்கத்தில் வரும் வேண்டத்தகாத விமர்சனங்களிருந்து விடுபட்டு சதந்திரமாக படைப்புக்களை மேற்கொள்வதற்கு அவர் எடுத்தக்கொண்ட ஒரு மந்திரக்கோலே கூத்தை அரங்களிக்கையாகச் செய்தாலும் 'இது கூத்தல்ல' என்பது. இராவணேசனை அவ்வாறே அறிமுகப்படுத்தினார். அவருடைய இந்த மந்திரக்கோலுக்கு மேற்கூறிய இருசாராரும் பெட்டிப்பாம்பாக கட்டுண்டனர். அது மட்டுமல்ல அதனை ரசிக்கவும் செய்தனர்.
கூத்தை கூத்தல்ல என்றவுடன் கூத்தல்லாததை கூத்து எனக் கூறி இந்த இரு சாராரையும் தனது புலமைத்துவ கட்டுக்குள் கொண்டுவந்த பேராசிரியருடைய ஆழ்மன வெளிப்பாடே 15 நிமிட கூத்துப் பாடலொன்றுக்கான ஆடல்களை கூத்தாக குறிப்பிட்டது என புரிந்து கொள்ளமுடிகின்றுத. அத்துடன் கூத்துக்களில் பெண் பாத்திரங்களைக் கூட ஆண்களேஏற்று ஆடுவது சமூகவழக்காக இருந்து வந்துள்ளது. கூத்தில் சகல பாத்திரங்களும் ஆண்களாகவே காணப்படுவர். ஆனால் பேராசிரியர் கூத்தென்று குறிப்பிடப்படும் இப்பாடலுக்கு ஆடிய அனைவரும் பெண்களாவர். மிக முக்கியமான ஒன்று இராமன், இலக்குவன் இருவருமே பெண்கள் ஏன் முழுக்கூத்தாட்டக் குழுவுமே பெண்கள். இலக்குமணன் போன்ற சமூக மதிப்புள்ள பாத்திரங்களைக்கூட பெண்களே ஏற்று நடித்தனர் என்பதைக் கவனித்தாக வேண்டும்.
அவரால் நடாத்தப்படும் அரங்க ஆய்வு கூடம் ஒன்றும் பெண்களுக்கு மட்டும் உரியதல்ல அவ்வாறெனில் இப்பாத்திரத் தேர்வுக்குள்ளும் மரபுவாதிகளின் இறுக்கப்போக்கை உடைத்து மீறுகின்ற அவருடைய ஆழ்மன வெளிப்பாட்டைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஓட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கூத்தும் பரதமும் என்ற அந்த ஆற்றுகை ஒரு எதிர் அரங்க ஆற்றுகையாகவே உள்ளது. பெயர் எதிர், பாத்திரங்கள் எதிர், ஆற்றுகை முறை எதிர் இவ்வாறு ஒரு எதிர் ஆற்றுகையைப் படைத்ததன் மூலம் ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியிருக்கின்றார் எனலாம்.





