Thursday, November 7, 2013

பாரம்பரிய நடன வடிவங்கள்


பாரம்பரிய நடன வடிவங்கள்

பாரம்பரிய நடன வடிவங்கள்
                                                                               
                                                                         தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எதனை மிகுதியாக தமது பண்பாட்டடையாளமாக கற்கின்றனர்?கர்நாடக இசையும், பரதநாட்டியமும் இன்றுவரை நம்மவர்களின் கைகளில் வீச்சுடனும் ஆழத்துடனும் வெளிப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு பகைப்புலத்தில் ஈழத்தமிழர்களின் மரபான இசை பற்றியும் நடனம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இசையிலுள்ள ஒத்திசை, ஒழுங்கு, இராகம் என்பன பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடும். ஒவ்வொரு இனத்தினிடையேயும் இது தமக்கான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கும். ஈழத்தமிழினமும் தனக்கான இசைமரபையும் பல தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளது. பண்பாட்டு அடிப்படையில் தமிழ்நாட்டோடு ஈழத்தமிழர்கள் நெருக்கமான தொடர்புகளையும் அடிப்படையான சில ஒற்றுமைகளையும் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்ட தனித்துவமான பல பண்பாட்டு அடையாளங்களை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளது. அதில் இசையும், நடனமும் முக்கிய ஒரு கதையாடலாக உள்ளன. இசை ஈழத்தமிழர்கள் மத்தியில் நம்பிக்கைகள் சார்ந்து கிராமிய வழிபாட்டு முறைகளோடு இணைந்ததாகவும், அதே நேரத்தில் இவற்றையெல்லாம் கடந்து வாழ்வியலோடு நெருக்கமான தொடர்புடையதாகவும் உள்ளது. தமிழிசை மரபின் அறாத் தொடர்ச்சியான ஒரு நீட்சியையே நாம் நமது மரபிலும், இசைமரபிலும் காணமுடிகின்றது. சுவாமி விபுலானந்தர் யாழ்நூலை ஆக்கியதற்கான அடிப்படை ஈழத்தமிழர்களிடையே மரபினடிப்படையில் நீண்டிருந்த இசை மரபின் தாக்கமே என்பதை நாம் இங்கு மனங்கொள்ள வேண்டும். அவருடைய இளமைக்காலத்தில் அவர் காதுகளில் ஒலித்த கண்ணகி குளிர்த்தியும், வசந்தன் பாடல்களும், கூத்திசையும் அவரது இசைபற்றிய ஆராச்சிக்கான அடித்தளமாக அமைந்தன.
பாரம்பரிய நடன வடிவங்கள்ஈழத்தமிழர்களின் பராம்பரியமான தாயகப் பிரதேசங்களான வடக்கிலும் கிழக்கிலும் இன்றுவரை இந்த இசைமரபின் பயில் நிலையை நாம் அவதானிக்க முடியும். இலங்கையில் உள்ள சிங்கள சமூகம் வடஇந்திய இசைமரபோடு நெருக்கமான தொடர்பை கொண்டிருந்த போதிலும் அறுபதுகளுக்கு பின்பு ஏற்பட்ட சிங்கள தேசிய எழுச்சி தங்களுக்கான பண்பாட்டு அடையாளங்களை கட்டமைக்க தொடங்கியது. அவர்களது வண்ணமும், கவியும் பல்வேறு கிராமிய இசைமரபுகளும் இன்றைய சாஸ்திரிய சங்கீதத்திற்கு அடிப்படைகளாக அமைந்தன. இதன் வாரிசுகளாக நாம் அமரதேவா, ஹேமதாச போன்றோர்களை இனங்காண முடியும். ஆனால் ஈழத்தமிழர்களின் இசைமரபுகள் இன்னமும் சாஸ்திர மயப்படாமல் மக்கள் இசையாகவே வழக்கில் உள்ளன. போராசிரியர் வித்தியானந்தன் ஈழத்து பாரம்பரிய இசை மீட்டுருவாக்கத்திற்கு பல ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சினால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் அனுசரணையோடு ஈழத்து பாரம்பரிய இசை மரபுகள் பற்றிய இசைத்தட்டு வெளியிடப்பட்டது. அவரது இந்த முயற்சி இசைத்தட்டு வெளியீட்டுடன் நின்றுவிட்டது. அடுத்த கட்டத்திற்கு அது எடுத்துச் செல்லப்படவில்லை. பின்னைய நாட்களில் அதாவது தொண்ணூறுகளின் பிற்பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஈழத்து இசைமரபை மாணவர்களது கல்வி முறைமைக்குள் இணைத்து செயற்பாடாக்கியது. பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி தயாரிப்புகளிலும் இசைமரபின் தொடர்ச்சியை வெளிப்படுத்தியது. குறிப்பாக கண்ணகி குளிர்த்தி, கிழக்கிசை, லயம், ஆகிய நிகழ்ச்சிகள் ஈழத்தமிழரின் இசைமரபின் தொடர்ச்சியை அதன் மீட்டுருவாக்கத்திற்கான அடிப்படைகளைத் தந்துள்ளன. இதுபோலவே திருமறைக் கலாமன்றம் யாழ்ப்பாண கூத்துப்பாடல்களையும் இசைநாடகப் பாடல்களையும், வசந்தன் பாடல்களையும் நிகழ்த்துகைகளாகவும் அண்மைய நாட்களில் ஒலி ஒளி இறுவட்டுகளாகவும் வெளியிட்டு ஆவணப்படுத்தி உள்ளது.
02.ஈழத்தமிழர்களின் தனித்துவமான இசைமரபுகள் என நாம் அடையாளம் காணக்கூடியவையாக : கரகம், கும்மி, மழைக்காவியம், ஒப்பாரி, வயல்பாடல்கள், அம்பா பாடல்கள், கவி, ஊஞ்சல் பாடல்கள், குளிர்த்திப்பாடல்கள், உடுக்கடி காவியம், காத்தவராயன் பாடல்கள், கோவலன் கதைப்பாடல்கள், கண்ணகி வழக்குரை, மாரியம்மன் நடை, மந்திர உச்சாடன முறைகள், கூத்திசைப்பாடல்கள், ஆட்டக்காவடி இசை, நடைக்காவடி இசை, வேடிக்கைப்பாடல்கள், இஸ்லாமியரின் கல்யாணப்பாடல்கள், பக்கீர் பாடல்கள், கிறிஸ்தவர்களின் சிலுவைப்பாடுகள் பற்றிய பாடல்கள் என நீண்டு செல்லும். இந்த இசைமரபு தங்களுக்கான தனித்துவமான தாள ராக ஒத்திசைவுகளைக் கொண்டுள்ளன. இந்த இசைமரபில் இணைந்திருக்கின்ற இசைக் கருவிகள் முக்கியமானவை.
உடுக்கு:
உடுக்கு இரண்டு வகைப்படும். வெங்கல உடுக்கு எனப்படும் பெரிய உடுக்கு மர உடுக்கு, தேங்காய் சிரட்டைகள் இணைந்த உடுக்கு என இரண்டு வகைப்படுத்தலாம்.
பறைமேளம்:
பாரம்பரிய நடன வடிவங்கள்பறைமேளத்திலும் நாம் இரண்டு வகையை நாம் அவதானிக்கலாம். சங்க இலக்கியத்தில் சொல்லப்படுவதுபோல சிறுபறை, பெரும்பறை இந்தப் பாகுபாட்டை நாம் ஈழத்திலும் காணலாம். பறையோடு இணைந்து வருகின்ற சொர்ணாளி ஈழத்திசையில் குழல் வாத்தியமாக உள்ளது. சல்லரி எனப்படும் தாளம், சிலம்பு, தாளமாங்காய், மத்தளம், கொட்டு, சங்கு என இவற்றை வகைப்படுத்திக் நாம் விளங்கிக்கொள்ள முடியும். இன்று நம்மத்தியில் இசைவாணர்களும் இசை விற்பனர்களும் உள்ளனர். நாம் கர்நாடக இசையையே நம்மிசையாக கருதி அதனையே நம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கின்றோம். ஆனால் நம் இசைமரபை மறந்துபோயுள்ளோம். வெறும் தெலுங்கு கீர்த்தனைகளை பயிலுகின்ற நாம் நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நம்மிசை மரபை கற்றுக்கொடுக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் இதில் தீவிர கவனம் கொள்ள வேண்டும். அத்துடன் நமது பல்கலைக்கழகங்கள் இதில் அக்கறையோடு செயல்பட்டு கல்விப் பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாக இதனையும் இணைக்க வேண்டும்.புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் இயங்குகின்ற ஈழத்தமிழர்கள் இதில் காத்திரமாக பங்களிப்பு செய்யமுடியும்.
03.ஈழத்தமிழர் நடனம் என்று நாம் பேசுகின்ற பொழுது கடந்த இரண்டாயிரம் வருடங்களாக தொடர்கின்ற கூத்து மரபையே நாம் கருத்தில் எடுக்க வேண்டும். கூத்து என்பது நடனத்துக்கான தமிழ்ச்சொல். காலப்போக்கில் ஏற்பட்ட சமஸ்கிருத செல்வாக்கு ‘நட்” என்ற சொல்லடியாக வந்த நடனம் என்ற சொல் தமிழ்ச் சொல்லாகவே இன்று பயன்பாட்டில் உள்ளது. ஈழத்தமிழர்களின் நடன மரபென்பது அவர்களது பண்பாட்டு உருவாக்கத்தின் மூலக்கூறுகளில் ஒன்று. ஒரு இனம் தனித்துவமாக பேசப்படுவதற்கு அதற்கான பண்பாட்டு அடையாளங்கள் முக்கியப்படும். அதிலும் குறிப்பாக நடன நாடக வடிவங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. ஈழத்தமிழர்களின் நடன முறைகள் பல்வகைப்பட்ட கூத்து வடிவங்களில் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னியென தமிழர் வாழ் பிரதேசமெங்கும் செறிந்து பரந்துள்ளது.
பறைமேளக்கூத்து:
இது மட்டக்களப்பிலேயே பெருவழக்கில் உள்ளது. இதில் தனியே ஆடல் வடிவம் மட்டுமே. இங்கு பாடல்கள் இல்லை. சொர்ணாளியும், பறையும் அதனோடு சிலம்பும் இணைந்த இசைக்கு பறை வாசிப்பவர்களே ஆடுகின்ற மரபு இதனுடையது. இன்றைக்கு சிங்கவர்கள் மத்தியிலுள்ள கண்டியன் நடனத்திற்கான மூலம் இங்கிருந்துதான் தொடங்குவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
வசந்தன் கூத்து:
வசந்தன் தனியே பாடலும் ஆடலும் இணைந்த இதில் பாத்திரங்கள் என்றில்லாமல் ஒரு கதையை ஆட்டமுறையின் மூலம் வெளிப்படுத்துவது. சிறுவர்கள் பெரும்பாலும் பங்கு கொள்கின்ற இந்த ஆட்டமுறை பல்வேறு விதமான ஆட்டக் கோலங்களை வெளிப்படுத்தியிருக்கும். இங்கு கதைகூறும் மரபே முக்கியப்பட்டாலும் இதில் ஆட்டமே பிரதானமாக வெளிப்படும்.
மகிடிக்கூத்து:
இதுவும் கதை பாடல் ஆடலெல்லாம் கலந்ததாக இருந்தாலும் பல்வேறு வகையான ஆட்டமுறைகள் பாடல்முறைகளின் இணைவை காணமுடியும். வடமோடி, வசந்தன், தென்மோடி, பிற்காலத்தில் இசையில் வந்து சேர்ந்த விசயங்களென எல்லாவற்றினுடைய கலவையையும் நாம் இங்கு காணமுடியும்.
மன்னார்க் கூத்துக்கள்:
இதில் வடபாங்கு, தென்பாங்கென இரண்டு மரபுகள் காணப்படுகின்றன. வடபாங்கு யாழ்ப்பாண மரபையும், தென்பாங்கு மாதோட்ட மரபையும் வெளிப்படுத்துகின்றன. இக்கூத்துகளில் ஆடல் குறைந்தளவில் வெளிப்பட பாடல்களே பிரதான பங்கு வகிக்கின்றன. ஆனாலும் பாத்திரங்களின் வரவு, தரு என்பன மிகுந்த ஆட்டக் கோலங்களை வெளிப்படுத்தி நிற்கும்.
யாழ்ப்பாணக் கூத்துக்கள்:
வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி பகுதிகளில் வழக்கில் இருந்த மரபு வடமோடிக்கு அண்டித்த சாயலுடையதாக இருக்க கரையோரப் பிரதேசங்களில் உள்ள கூத்துக்கள் தென்மோடியை அண்மித்ததாக உள்ளன. இதேவேளை காத்தவராயன் சிந்து நடைக்கூத்தையும் நாம் யாழ்ப்பாண மரபில் இணைத்துக்கொள்ள முடியும்.
வன்னிக் கூத்துக்கள்:
இங்கு காத்தவராயன் கூத்தும், கோவலன் கூத்தும் முக்கியம் பெறுகின்றன. காத்தவராயன் கூத்து சிந்துநடையும், துள்ளல் தன்மையும், தனித்துவமான இசை மரபையும் கொண்டது. கோவலன் கூத்து மட்டக்களப்பு தென்மோடியின் சாயலை உள்வாங்கிய ஒரு வடிவமாக காணப்படுகின்றது.
வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள்:
பாரம்பரிய நடன வடிவங்கள்ஈழத்தமிழர்களின் செந்நெறி சார்ந்த ஆட்டமரபாக நாம் வடமோடி, தென்மோடி ஆட்ட வடிவங்களையே கொள்ளமுடியும். குறிப்பாக மட்டக்களப்பில் ஆடப்படுகின்ற இந்த வடிவங்கள் இத்தகைய பண்பைப் பெற்றுள்ளன. இதனாலேயே கூத்து மீளுருவாக்க முயற்சியில் ஈடுபட்ட பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்பு கூத்துக்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேடையேற்றினார். ஆடலிலும் பாடலிலும் இரு மோடிகளுக்கும் வேறுபாடு உண்டு. தென்மோடி ஆட்டங்கள் வடமோடி ஆட்டங்களைவிட நுணுக்கமானவை. வடமோடி ஆட்டங்கள் அழகுவாய்ந்தவை. தென்மோடியில் பாட்டுக்களை இழுத்துப்பாட, வடமோடியில் நடிகர் தம்பாட்டைப் படிக்க பக்கப்பாட்டுக்காரர் முழுதாக அதனை பாடிமுடிப்பர். தென்மோடியில் கடைசிப் பகுதியை மட்டும் பிற்பாட்டுக்காரர் படித்து முடித்துவிட்டு பாட்டு முழுவதுக்குமுரிய தருவைப் பாடுவார். ஒவ்வொரு பாத்திரத்தின் வரவு நடைபெறும்போது வெவ்வேறு வகையான தாளங்களை மத்தளத்தில் இசைப்பர். அத்தாளங்கள் வாயால் சொல்லப்படும்போது பதவரிசை தாளக்கட்டு எனப்படும். ஆட்டத்திற்குரிய தாளங்களை சொற்கோர்ப்பினாலேயே தொடுத்து அல்லது கட்டி அமைத்தலே தாளக்கட்டு. தாளக்கட்டு, பாத்திர வரவின்போது அண்ணாவியார் திரும்ப திரும்ப படிப்பார். எட்டுமுறை, பன்னிரெண்டுமுறை என அண்ணாவியாரின் மனநிலைக்கேற்ப அது அமையும். இத்தாளக்கட்டுகள் ஆண்கள், பெண்களுக்கு வேறுவேறானதாக இருப்பதோடு பாத்திர வேறுபாட்டையும் பிரதிபலிக்கும். ஆண்களுக்குரிய தாளக்கட்டு உலா, பொடியடி, வீசாணம், எட்டு, நாலடி, குத்துமிதி, பாச்சல் என அமைந்திருக்கும். பெண்களுக்குரிய தாளக்கட்டுகள் ஒய்யாரம், பொடியடி, வீசாணம், எட்டு, தட்டடி, அடந்தை, குத்துநிலை என வரிசைப்படும். வடமோடி ஆட்டங்களின் திறனும் அழகும் இத்தாளக்கட்டில் வெளிப்படுகின்ற ஆட்டங்களினால் வெளிப்படும். இத்தாளக்கட்டுக்கான ஆட்டங்களே வடமோடி தென்மோடியின் உயிர்த்தன்மையாகும். இவையே ஏனைய ஆட்ட முறைகளிலிருந்து வேறுபடுத்துவதோடு இதற்குரிய கலைப் பெறுமானத்தையும் செந்நெறித் தன்மையையும் பெற்றுக் கொடுக்கின்றன.
04.இன்று நாம் ஈழத்தமிழரின் நடனம் என்ற ஒரு கருத்துருவாக்கத்தை கொள்வதற்கான அடிப்படைகளை வடமோடி தென்மோடி ஆட்டமுறைகளில் காணலாம். ஆகவே இதனை அடிப்படையாக வைத்தே கடந்த சில ஆண்டுகளாக பேராசிரியர் சு.வித்தியானந்தன் விட்ட இடத்திலிருந்து அடுத்த கட்ட முயற்சிகளை நாம் மேற்கொண்டோம். இந்த முயற்சிகளின் உந்து சக்தியாக போராசிரியர் சி.மௌனகுரு செயல்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 1998ல் கிழக்கு பல்கலைக்கழக நாடக விழாவில் வடிவமைக்கப்பட்ட இன்னிய கருத்துரு, 1999ல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரு முழுமையை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றுவரை கிழக்கு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாக்களில் இன்னிய அணி பயன்படுத்தப்படுகின்றது. இன்னியம் என்பது ஈழத்தமிழர் கலை பாரம்பரிய இசை நடன மரபுகளை இணைத்ததான ஒரு தமிழ்பாண்ட் ( ) என்று சொல்லலாம். நமது அடையாளத்தை தாங்கிய இவ்வகையான ஒரு கலாச்சார இசையணி புலம்பெயர் நாடுகளில் அவசியமான ஒன்றாகும். அவ்வகையில் பிரான்சில் 2008ம் ஆண்டு தைத்திங்களில் நடைபெற்ற தமிழர் திருநாள் என்னும் பொங்கல் விழாவில் இன்னிய அணி அறிமுகப்படுத்தப்பட்டது. பிரான்சின் சிலம்பு அமைப்பின் வழிகாட்டலில் பல்வேறு தமிழர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் இத்தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது. புலம்பெயயர் தேசமொன்றில் இன்னிய அணிக்கு கால்கோல் இட்டது பிரான்ஸ் என்றே கொள்ளலாம். இதில் நடன ஆசிரியை அனுஷாவினையும் அவரது மாணிவியரையும் இணைத்து இன்னிய அணியை வடிவமைத்து அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் இந்த முயற்சியை கருத்தியலாக முன்னெடுப்பதிலும் அறிமுகப்படுத்துவதிலும் தமிழர் திருநாள் நெறியாளர்களுள் ஒருவரான கி.பி.அரவிந்தனினதும், சிலம்பு அமைப்பின் செயலாளரான க.முகுந்தனினதும் பங்களிப்புகள் முக்கியமானவையாகும். தொடர்ந்து 2008 வைகாசித் திங்களில் இலண்டனில் தேம்ஸ் தமிழ்ச் சங்கம் நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவிலும் இன்னியம் அறிமுகமானது. இலண்டன் வாழ் தமிழ் மாணவர்கள் இதில் பங்கு பற்றினர். திரு.வரன், திரு.சீலன் ஆகிய இருவரின் முயற்சியால் இது சாத்தியமானது. இதன் தொடர்ச்சியாக 2009ம் ஆண்டு நோர்வேயில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் இன்னியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 50 மாணவர்கள் பங்கேற்றனர். நோர்வே தமிழர்வள நிலையத்தார் இதனைச் செயல்படுத்தினர். இதில் குறிப்பாக பாஸ்கரன், ஆசிரியை மல்லிகா குழுமத்தினர் அக்கறையுடன் செயல்பட்டனர்.
பாரம்பரிய நடன வடிவங்கள்இந்தப் பின்னணியில் விடிய விடிய ஆடப்பட்ட கூத்துமரபின் தனியான ஆட்ட மரபுகளை இணைத்து ஈழத்தமிழரின் நடனத்தை கட்டமைப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. நோர்வேயில் நடன ஆசிரியர் திருமதி மாலதியின் நடனப்பள்ளியின் பதினைந்தாவது ஆண்டு விழாவில் (08-11-2008) இம்முயற்சி அரங்கேறியது. வடமோடியின் அரச வரவு ஆட்டத்தினை இருபதற்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்த்திக் காட்டினர். ஒரு பரதநாட்டியப் பள்ளி முதல்முறையாக கூத்தை அடிப்படையாகக் கொண்ட ஈழத்தவர் நடனத்தை அரகேற்றியது முக்கிய அம்சமாகும். இதுவோர் வரலாற்றுப் பதிவாகும். இதன் அடுத்த கட்டமாக பரத நாட்டிய அரகேற்றத்தில் கூத்து ஒரு உருப்படியாக இணைக்கப்பட்டமையாகும். இந்த அதிசயமும் நோர்வேயிலேயே நிகழ்ந்தது. பரதநாட்டிய ஆசிரியை மேர்சியின் மாணவி ராகவி இதனை நிறைவேற்றினார். இதுவும் உலக அளவில் முதல்முறையாக நிகழ்ந்த ஒரு வரலாற்று பதிவாகும். இத்துடன் நோர்வேயின் அரசசார்பில் இயங்குகின்ற பாடசாலை ஒன்றில் ஈழத்து கூத்து ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட உள்ளது. இதனை திருமதி வாசுகி ஜெயபாலன் பொறுப்பேற்று நடாத்த உள்ளார். இலண்டனிலும் நடனஆசிரியை திருமதி ராஜினியின் மாணவிகள் தங்களது பள்ளி ஆண்டுவிழாவில் ஈழத்தமிழர் நடனமாக கூத்தினை அறிமுகப்படுத்தினர். ஈழத்து நடனம், அதன் வடிவம் என்பவற்றிற்கான ஆரம்ப விதைகள் கருத்தியலாகவும், செயல்வடிவமாகவும் புலம்பெயர் நாடுகளில் தூவப்பட்டுவிட்டன என்றே கொள்ளலாம். ஈழத்து நடனம் முழுமை பெற நாம் பயணிக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. தடைகளைத் தாண்டி உலகப்பரப்பில் நம் அடையாளத்தை நிறுவ இணைந்தே பயணிப்போம்.

By -’[googleplusauthor]‘
நன்றி – ஆக்கம் – பாலசுகுமார் – முன்னாள் கலைப்பீடாதிபதி, கிழக்கு பல்கலைக்கழகம்.

இக்கட்டுரை பிரான்ஸ் புலம்பெயர் தமிழர் திருநாள் – 2009 சிறப்பு மலரிலிருந்து மீள் பிரசுரமாகின்றது.
 http://www.ourjaffna.com/

மட்டக்களப்புக் கூத்து

மட்டக்களப்புக் கூத்து

ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்
  
மூனாக்கானா

கூத்து என்றவுடன் எம் எண்ணத்தில் முதலில் வருவது ஆட்டமே. ஆட்டம் இல்லையென்றால் கூத்து, விலாச நாடகம் (Drama) ஆகிவிடும். கூத்தின் சிறப்பு ஆட்டத்திலே தங்கியிருக்கிறது.
ஏனைய இடங்களில் ஆடப்படும் கூத்துகளிலும் பார்க்க மட்டக்களப்பில் ஆடப்படும் கூத்துக்களில் ஆட்டம் சிறப்பாக அமைந்திருக்கும். ஆட்டத்தோடு மத்தள அடியும் இணைந்து போக வேண்டும். இல்லையென்றால் ஆட்டமே பிழைத்துவிடும்.
முதன் முதல் கூத்தாடியவன் தில்லைக் கூத்தன். இதற்கு மத்தளம் அடித்தவன் திருநந்திதேவன். இது தெய்வக்கூத்து இதன் பின்பு மனிதக் கூத்து ஆரம்பித்தது.
கற்காலத்து மனிதர்கள் தங்கள் உணவுக்காக காடுகளில் அலைந்து திரிந்து, கல்லாயுதங்களாலும், வில்லாயுதங்களாலும் மிருகங்களை வேட்டையாடும் போது மிருகங்கள் விழுந்துவிட்டால் ஓடிப்போய் அதைப் பார்த்ததும் மிகிழ்ச்சியினாலே துள்ளிக்குதித்து ஆடியிருப்பார்கள்.
பின்பு அம் மிருகத்தை பச்சையாகவோ, நெருப்பில் வாட்டியோ உண்டபின்பும் கூட்டமாகத் துள்ளிக்குதித்து ஆடியிருப்பார்கள்.
இது இரண்டாவது படிமுறைக் கூத்துமல்லாமல், மனிதனது முதலாவது கூத்துமாகும். இதன் பின்னர் மக்கள் நாகரிகம் அடைய அடைய இக்கூத்து பல பரிணாம வளர்ச்சிகளைப் பெற்று சாஸ்திர ரீதியான கூத்தாக இன்று விளங்குகிறது.
நதி மூலம் ரிஷிமூலம் தேடுவது போல நமது கூத்தின் மூலத்தையும் தேடிய பலர் கூத்தின் பிறப்பிடம் தமிழ் நாடு என்றும் வேறு சிலர் மலையாளம் என்றும் கூறினாலும், மட்டக்களப்புக் கூத்தின் பிறப்பிடம் மட்டக்களப்புத்தான் என்பதை இலகுவில் எவரும் ஒதுக்கிவிட முடியாது.
வட கேரளத்தில் கிருஷ்ணாட்டம் பிரபலமாக இருந்தபோது தென்கேரளத்து மன்னன் கொட்டாரக்காரத் தம்பிரான், இந்த ஆட்டத்தைப் பார்க்க விரும்பி அக்கலைஞர்களை அனுப்பி வைக்கும்படி கேட்டபோது வடகேரள மன்னன் மறுத்தது மட்டுமல்லாமல் பரிகாசமும் பண்ணி அனுப்பினான்.
இதனால் கவலையடைந்த தம்பிரான் தனது நாட்டிலுள்ள அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், நாட்டியகாரர்கள் அனைவரையும் அழைத்து, ஒரு புதிய ஆட்டத்தை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டான்.
இதற்கு இராமனாட்டம் என்று பெயர். மட்டக்களப்பு மக்கள் மலையாளத்துப் பரம்பரையைச் சேர்ந்தவர்களாகையால் வடகேரளத்தில் ஆடிய கிருஷ்ணாட்டம் வடமோடியாகவும், தென் கேரளத்தில் ஆடிய இராமனாட்டம் தென்மோடியாகவும் ஆடப்படுவதாக சிலரின் அபிப்பிராயம்.
இவற்றின் மறுவடிவமாகிய கதகளியே மட்டக்களப்புக் கூத்தின் மூலம் எனவும் கூறுகிறார்கள். ஆனால் கதகளிக்கும் நமது கூத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. கதகளியில் கர்நாடக சங்கீதம் பயன்படுகிறது.
தோல் வாத்தியமாக, நிலத்தில் நிலைக்குத்தாக வைத்து ஒருபக்கம் மட்டுமே அடிக்கும் செண்டை வாத்தியம் பயன்படுத்தப்படுகிறது. இதில் கதாபாத்திரங்கள் பாடுவதில்லை. ஆனால் ஒப்பனையில் மட்டும் ஒரு சில ஒற்றுமைகள் உண்டு. எனவே கதகளிதான் நமது கூத்தின் மூலம் என்று எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.
வேறு சிலர் தமிழ் நாட்டில் விந்திய மலைக்கு வடக்கேயும், தெற்கேயும் நடத்தப்பட்ட தெருக்கூத்துகளே இங்கு வடமோடி தென் மோடி என ஆடப்படுவதாகக் கூறுகிறார்கள்.
நேபாளத்தின் சாக்கியர் கூத்தும், ஆந்திராவின் குச்சுப்புடியும், வட இந்தியாவின் மணிப்புரியும், கேரளத்தின் கதகளியும் தமிழ் நாட்டின் பரத நாட்டியமும், இப்போதும் இலங்கையில் ஆடப்படும் போது அவற்றின் அமைப்பு சிறிதும் மாறுபடாமல் ஆடப்படுகிறது.
ஆனால் நமது கூத்தின் ஆடல், பாடல், இசை, வாத்தியம், உடையலங்காரம், ஒப்பனை எல்லாம் இந்தியாவிலிருந்து வந்த கூத்துக்களிலிருந்து மாறுபட்டுத் தனித்தன்மையுடன் காணப்படுகின்றது.
எனவே, நமது கூத்து எங்கிருந்தும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதே உறுதியான உண்மையாகும். அப்படியானால் நமது மட்டக்களப்புக் கூத்துக்களின் பிறப்பிடம் மட்டக்களப்புத்தானா என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.
புளியந்தீவை மையமாகக் கொண்ட பகுதியே மட்டக்களப்பு என்பதை தற்காலிகமாக மறந்து விட்டுப் படியுங்கள். தற்போது அம்பாறை எனப்படும் பிரதேசமே பண்டைய மட்டக்களப்பின் மையமாகும்.
ஒல்லாந்தர் கோட்டை கட்டி ஆட்சியை தொடங்கிய பின்னர் பல இடங்களிலிருந்தும் மக்கள் குடியேறிய பின்னரே தற்போதய மட்டக்களப்பு உதயமானது.
பண்டைய மட்டக்களப்பில் பட்டிநகர், உகந்தை, திருக்கோயில் சங்கமான் கண்டி, பனங்காடு, அக்கரைப்பற்று, கோளாவில், வாகூரை, வீரமுனை, மணல்புட்டி, சலவை பாணமை, நாவலூர், நாகமுனை, வதன வெளி, தம்பட்டை, தளகைக்குடா என்பன பேரூர்களாகும். இங்கே பல புலவர்களும், பண்டிதர்களும், கலைஞர்களும், அறிஞர்களும், சோதிடர்களும், மந்திரவாதிகளும், பரிசாரிமார்களும் அண்ணாவிமார்களும் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இதை பின்வரும் பாடலால் அறியலாம்.
 
“இயலிசை நாடகம் எங்கும் விளங்க
பல நூலாய்ந்த பண்டிதர் சிலரை
கவிபல விளங்கக் காசினியோர்க்கு”
எனப் போடிகல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவர்கள் ஏன் நமது கூத்துக்களை ஆக்கியிருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறது. இப்பொழுதும் கேரளாவில் என்ற ஊரில் பல அண்ணாவிமாரும் மந்திரவாதிகளும், சித்த வைத்தியர்களும் இருக்கிறார்கள்.
இங்கு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தாமோதரம் பிள்ளை என்ற அண்ணாவியார், சயிந்தவன் நாடகம், தரும்புத்திரர் நாடகம், அல்லி நாடகம் போன்ற பல வடமோடிக் கூத்துகளை தெற்கு ஆரையம் பதியில் பழக்கியுள்ளார்.
கல்முனையைச் சேர்ச்த கணபதிப் பிள்ளை என்னும் அண்ணாவியார், வாளபிமன் நாடகம், அலங்கார ரூபன நாடகம் போன்ற தென்மோடி நாடங்களை ஆரையம்பதி நடுத்தெருவில் பழக்கியுள்ளார்.
தாமோதரம் பிள்ளை அண்ணாவியார் பழக்கிய ஒரு கூத்துப் பாடலிலே,
 
“ஆனாப் பானா கோவன்ன
ஊனாத் தாவன்னா சொன்ன
அன்பான செந்தமிழை
பண்பாய் உரைத்துக் கொண்டு”
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆனாப் பானா’ என்றால் அக்கரைப்பற்று ஊனாத்தாவன்னன என்றால் உலகிப் போடி தாமோதரம் பிள்ளை எனப் பொருள்படும். இது மட்டுமல்லாமல் அலங்கார ரூபன் தென்மோடி கூத்திலே உள்ள கடவுள் வணக்க விருத்தத்திலே
 
“திருக்காரைப் பழித்த குழல் அலங்கார
ரூபிதனைச் செல்வம் போற்ற
பெருக்காரை அலங்கார ரூபனருள்
நாடகத்தைப் பெரிதுபாட
செருக்காரைக் கொழுப்படக்கி சிறியவர்க்கும்
நெடியவர்க்கும் சிறப்பாயீந்து
மருக்காரைப் பதிவளரும் காத்தவராசன்
பாதம் வணங்குவோமே”
என கூத்து ஆக்கப்பட்ட ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்படும் ஊரை ஆரைப்பதி என்றும் காரைப்பதி என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முந்திய விருத்தத்திலே “கதிரை வரை மருவுமொரு குமரனிரு தாள் காப்புத்தானே” என கடவுள் வாழ்த்துப் பாடியிருப்பதால் மருக்காரைப் பதிவளரும் காத்தவராசன் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது குருவணக்கமாக இருக்கலாம்.
கூத்துகள் ஆடப்பட்டு வரும் பிரபலமான ஊர்களிலே ஆரையம்பதியும் ஒன்றாக இருப்பதால் இவ்வூர் ஆரையம்பதியைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்பது சிலரது அபிப்பிராயம் எந்த ஊராக இருந்தாலும் இது மட்டக்களப்பில் இருப்பதால் இக்கூத்தை ஆக்கிய புலவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் என்பது புலனாகிறது.
வேறு இடங்களிலிருந்தும் சில கூத்துகள் வந்திருக்கலாம். இதையும் நிராகரிக்க முடியாது. எனவே மட்டக்களப்பில் ஆடப்படும் பெரும் பாலான கூத்துகளின் பிறப்பிடம் மட்டக்களப்பே என்ற முடிவுக்கு நாம் வரலாமென நினைக்கின்றேன். இந்த அபிப்பிராயத்தோடு ஒன்றுபட்டவர்களும் இருக்கலாம்.
வேறுபட்டவர்களும் இருக்கலாம். வேறுபட்டவர்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினால் இது பற்றிய ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்குமென எண்ணுகிறேன்.
எவ்வாறாயினும், மட்டக்களப்புக் கூத்து யாழ்ப்பாணத்திலிருந்தோ, தமிழகத்திலிருந்தோ வந்தது என்பது மிகவும் அபத்தமான கூற்று. எவ்வித ஆதாரமும் அற்றது என்பதை வாசகர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
 இக் கூத்து நாட்டுக்கூத்து அல்ல, நாட்டார் கூத்துமல்ல. அது பரத நாட்டியம் போன்று தனித்துவமான ஆட்ட இலக்கணங்களுக்கு அமைந்த செந்நெறிக்கலை எனப் பேராசிரியர் சி. மெளனகுரு அறுதியிட்டுக் கூறியிருப்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். நீண்டகால ஆராய்ச்சியின் பின் அவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

இனி மட்டக்களப்புக் கூத்துக்களிலுள்ள ஒரு சில சிறப்பு அம்சங்களைக் கூறவிரும்புகிறேன். ஆட்டத்திலே சக்கரவர்த்திகள், கடவுளர்கள் வயதான பாத்திரங்களுக்கு, தாளக்கட்டு,

“தகதிக தாம் தெய்யா தெய்தெய்

தாதெய்யத்தோம் தகதிக” என சாந்தமானதாகவும், வீரர்களுக்கு,

“தாம் தெயயத்தெய் தக்கச்சந்தரிகிட” என வேகமானதாகவும் குதிரை வீரர்களுக்கு,

“சேகணம் சேகணம் தத்தா

ததிந்தத்தா தெய்தெய்” - என வடமோடியிலும், தென் மோடியில் வீரர்களுக்கு,

தாதாம் தாதெய்ய தாதாம் தெய்ய எனவும், மற்றப்பாத்திரங்களுக்கு,

“ததித்துளாதக ததிங்கிண கிடதக

தாதிமி தெத்தா தெய்யே” என பொருத்தமான வரவுத் தாளக்கட்டுகள் அமைந்திருப்பது ஒரு சிறப்பாகும்.

பாடல்களை நோக்கும் போது மோனைகள், முன் எதுகை பின் எதுகைகளோடு கூடிய கவர்ச்சிகரமான பாடல்களும், சயங் கொண்டார், அருணகிரி நாதர் போன்றவர்களின் பாடல்களைப் போன்ற சந்தச் சிறப்பு மிக்க பாடல்களும் அமைந்துள்ளன.

அத்தோடு கர்நாடக சங்கீதத்தில் (விருத்தம்) தொகையறாவும் அதைத்தொடர்ந்து பாடலும் அமைந்துள்ளது போல கூத்துப் பாடல்களிலும் பல பாடல்கள் உள்ளன. வடமோடியில் இதற்கு கந்தார்த்தம் என்றும், தென்மோடியில் கொச்சகத்தரு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

உடையலங்காரம் ஒப்பனைகளைப் பொறுத்தவரையில் கரப்புடுப்பு எனப்படும் நெட்டுடையும், கத்தாக்கு எனப்படும் வட்டுடையும், மன்னர்கள் அணியும் கிரீடங்களும், வேறுர் கூத்துகளில் காணப்படாத சிறப்பம்சமாகும்.

இத்தகைய ஆடை அலங்காரம் தென்மோடிக் கூத்துகளுக்கு சிறப்பாக அமைந்தவை இனி கவிநயங்களைப் பார்ப்போம்.

கம்பர் போன்ற மகா கவிஞர்களின் பாடல்களிலே அமைந்துள்ள நயங்களையும் விட மேலான கவிநயங்கள் கூத்துப் பாடல்களிலும் உள்ளன என்பதை விளக்குவதற்காக எடுத்துக் காட்டாக இரு பாடல்களைக் கூறவிரும்புகிறேன்.

வாளபிமன் நாடகம் தென்மோடிக் கூத்திலே ஒருபாடல். அர்ச்சுனன் தன்மகன் வாளபிமனுக்கு கிருஷ்ணரின் மகள் சுந்தரியை மணம் பேசி நிச்சயார்த்தம் செய்துவிட்டு வனம் போகிறான்.

இதை அறிந்த துரியோதனன் தன்மகன் இலக்கண குமரரனுக்கு சுந்தரியை மணம் முடிக்க பலபத்திரரோடு சென்று கிருஷ்ணரிடம் சம்மதம் பெற்று நாளும் குறிப்பிட்டாகிவிட்டது. இதை அறிந்த சுந்தரி, மனிதரால் இத்திருமணத்தை நிறுத்த முடியாதென உணர்ந்து இராமரிடம் முறையிடுவதாக ஒரு பாடல்,


“இந்த மண்ணும் வெந்த மண்ணும் - இதை

எடுத்தொருவர் அடுத்து வைத்தால் - இது

சிந்தியே பேறாகமலே ஒன்றாய்

சேருமோ அரிராமா”

இங்கு இப்பாடலிலே இருவகை மண்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று ஈரலிப்பான களிமண், மற்றது உருவாக்கப்பட்டு சூளையிலே வெந்தமண் இவ்விரு மண்களையும் கைகளிலே வைத்துக் கொண்டு இவ்விரு மண்களும் ஒன்றாகுமா? சிந்தி வேறு வேறாகி விடுமல்லவா? என இராமனிடம் கேட்கிறாள். நான் உலக வாழ்வின் திருமண நியதிப் படி வாளபிமனுக்கு மனைவியாக ஆக்கப்பட்டு விட்டேன்.

(வெந்த மண்ணாக) இனி இலக்கண குமாரனுக்கு மனைவியாக முடியுமா? எனக் கேட்கிறாள். அதுவும் யாரிடம் நீதி கேட்கிறாள் தெரியுமா? ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என வாழ்ந்து காட்டிய இராம பிரானிடம் கேட்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறதென்பதைக் கவனியுங்கள்.

அடுத்து வரும் பாடல் அலங்கார ரூபன் தென்மோடிக் கூத்திலுள்ளது. அலங்கார ரூபியும் தோழிகளும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது குளத்திலிருந்த மீன்கள் மேலே பாய்ந்து அலங்கார ரூபியின் மேல் விழுகின்றன. இதைக் கண்டதும் அலங்கார ரூபி தோழிமார்களிடம் பின்வருமாறு கேட்கிறாள்.


“வேலன்றி வாளன்றி வேறொன்றில்லாமல்

விழி கொல்லும் பெண்ணாரே! - எந்தன்

காலுக்கும் மேலுக்கும் மேலுக்கொருமீன்

கதித்துக்குதிப்பதென்ன - என்தோழி”

இந்த வினாவுக்கு தோழிகள் கூறும் பதில் வருமாறு

“கோலக் குழையில் பொன்னோலையில் மாலையில் கூடித்திரும்பு கண்ணை - இனமென்று வாலப்பருவத்து வேல்கண்டு மேல் கொண்டு

வந்து குதித்த தம்மா - என் அம்மா”

என்று தோழி பதில் கூறுகிறாள். இனி இவற்றிலுள்ள நயங்களைப் பார்ப்போம். வேலாயுதத்தாலும், வாளா யுத்தாலும் வேறு எந்த விதமான ஆயுதத்தாலும் கொல்ல முடியாத வாலிபர்களின் உள்ளத்தமைதியை உங்களது விழியாகிய (கண்) ஆயுதத்தாலே பார்த்தவுடன் கொல்லுகின்ற பெண்களே! என்று கூறியிருப்பது கற்பனையின் உச்சக் கட்டத்தைத் தொடுகிறதல்லவா? இந்தக் காலத்துக் கவிஞர்களும் இந்தக் கற்பனை கையாண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு தோழிகள் கூறிய பதில் கற்பனைச் சிகரத்தையே தொட்டு நிற்கின்றது.

அம்மா! பொற்றகட்டினாலே இழைக்கப்பட்ட உங்களது தோடுகளோடும், அணிந்துள்ள மாலைகளோடும், கயல்மீன் போன்ற உங்களது கண்கள் இரு பக்கங்களிலும் அசைந்து சென்று பார்த்து கூடித் திரும்புவதை குளத்திலே உள்ள வாலிபப் பருவத்துச் கயல் மீன்கள், தங்களுடைய இனமென்று எண்ணி உங்களது கண்களோடு கூடிக்குலாவுவதற்கு உங்கள் மேல் பாய்கின்றன என்று பதில் கூறுகிறாள்.

இப்படிப்பட்ட கற்பனைதயங்களை எங்களாலும் தர முடியுமென கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் பார்த்தே சவால் விடுவது போல இப்பாடல் அமைந்திருக்கிறது. இவைபோல இன்னும் பல நயம்மிக்க பாடல்கள் விசேடமாகத் தென்மோடிக் கூத்துக்களிலே இருக்கின்றன.

இவை போன்ற காதல் சுவைமிக்க பாடல்கள் அமைந்திருப்பதாலும், காதல் கதைகளையே தென்மோடிக் கூத்துக்கள் கருவாகக் கொண்டிருப்பதாலும் தென் மோடிக் கூத்துகளெல்லாம் காமரசம் ததும்பும் அகப்பொருள் கூத்துகள் என்றும், வடமோடிக் கூத்துகள் வீரம் செறிந்த புறப்பொருள் கூத்துகளெனவும் கூறுகிறார்கள்.

கூத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் எவரானாலும் மதிப்புக்குரிய பேராசிரியர் மெளன குருவின் பெயரைக் கூறாவிட்டால், நாம் நன்றி மறந்தவர்களாவோம்.

நமது கூத்துக்கு அவர் செய்த செய்து கொண்டு வருகின்ற பணிகள் பல உ.வே. சாமி நாதையாரைப் போல ஊர் ஊராகச் சென்று ஏடுகளைச் சேகரித்து அண்ணாவிமாரையும் சந்தித்து கூத்து பற்றி ஒரு பெரிய ஆய்வு நூலை எழுதியுள்ளார்.

ஆண்டுகள் தோறும் நாடக விழா நடத்தி கூத்தை அறிஞர்களும் ஏற்றுக்கொள்ளும்படி உயர்த்தினார். சினிமாவின் தாக்கத்தினாலே கோமா நிலையில் உறங்கிக் கிடந்த நமது கூத்தை சிங்களக் கலைஞர்களும் அறிஞர்களும் வியக்கும்படி மேடை ஏற்றியவர்.

ஒதுங்கிக் கிடந்த அண்ணாவிமார்களை அறிஞர்கள் மத்தியிலே சிம்மாசனத்தில் ஏற்றினார். ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில பிறந்திராவிட்டால் சைவம் அழிந்திருக்கும் என்பார்கள். நானோ, மட்டக்களப்பிலே பேராசிரியர் மெளன குருபிறந்திருக்காவிட்டால் நமது கூத்து அழிந்திருக்குமெனக் கூறுகிறேன்.

கூத்துக்கள் அழியாமல் இருந்தாலும், அதன் மகத்துவம் மக்களுக்குத் தெரியாமல் போயிருக்கும். கிராமியக்கலை எனப் படித்தவர்களால் ஏளனக் கண்கொண்டு நோக்கப்பட்ட இக்கூத்துக்கலையைப் பல்கலைக்கழகத்தில் புகுத்த படித்தவர் மத்தியில் நற்பெயர் பெறச் செய்தது மட்டுமல்லாமல், முறையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு கூத்துக்கலை நமது பொக்கிஷம். நமது முதுசம் என்று நிறுவியவர் பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களே.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி, மே 16, 2010

Wednesday, November 6, 2013

ஆற்றுப்படுத்தும் அரங்காக கூத்து

* “ஆற்றுப்படுத்தும் அரங்காக கூத்து” -யாழினி யோகேஸ்வரன்

 

அறிமுகம்

ஈழத்து தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளில் 

ஒன்றான கூத்து ஈழத்துத்தமிழர் மத்தியில்
 மகிழ்வுடனும், அழகியலுடனும் 
பயிலப்பட்டு வருகின்றது.
 ஈழத்துத் தமிழர் எங்கெல்லாம் செறிந்து
வாழ்கின்றார்களோ அவ்வாறான பிரதேசங்களில்
 எல்லாம் அவர்களுக்கான பாரம்பரியக் கூத்த
 வடிவங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்னணியில் பாரம்பரியத் 

தொடர்ச்சிமிக்க வன்னிப் பெருநிலப்பரப்பிலே 
ஏற்பட்ட யுத்தப் பேரழிவு, இடப்பெயர்வு அதன் 
பின்னரான  முகாம் வாழ்வுச் சூழலிலும் 
அம்மக்கள் தமது பாரம்பரியக் கூத்துக்களை 
 முன்னெடுத்துள்ளனர்தமது பண்பாட்டுத் தளத்தில் 
நின்று சடங்குக்குரியதாகவும் 
மகிழ்வூட்டலுக்குரியதாகவும் கருத்திலெடுக்கப்படும் 
 கலைச் செயற்பாடொன்று தமது வாழ்வின் 
இருப்புப் பெயர்க்கப்பட்டு இடப்பெயர்வு
 திணிக்கப்பட்டதான முற்றிலும் புறம்பான முகாம் 
வாழ்வுச் சூழலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 
பாரம்பரியமாக தத்தம் பண்பாட்டு தளத்தில் நின்று
(சூழல்,கருத்தியல்,நம்பிக்கை,மரபு அல்லது தொடர்ச்சி) முன்னெடுக்கப்பட்டிடும் அல்லது வாழ்வியல் 
நடைமுறைகளில் ஒன்றாகக் கொள்ளப்படும்
 கூத்துக்கள், மேற்படி அடித்தளமே தகர்க்கப்பட்ட, 
பழக்கமற்ற,சவால்கள் சூழ்ந்த வாழ்க்கைமுறையினுள் திணிக்கப்படுகையிலும்கூட முன்னெடுக்கப்படவேண்டியதன்
 அவசியம் என்ன?
 என்பதை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வுக்
 கட்டுரை முன் வைக்கப்படுகின்றது.


வன்னிப் பிரதேசத்தில் கூத்து ..........


.http://eathuvarai.net/?p=2586