பாரம்பரிய நடன வடிவங்கள்
தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவங்கள். ஈழத்தமிழர்கள் உலகில் வாழ்கின்ற எல்லா சமூகங்களையும் போலவே தமக்கான தனித்துவமான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். இன்று உலகில் ஈழத்தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவர்களின் உலக வெளி பரந்துள்ளது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத அடையாளச் சிக்கல்களை உலக வெளியில் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளமையை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் இதுவரை காலமும் கட்டிக்காத்து வந்த இசை நடன மரபுகள் எவை? பொதுப்பரப்பில் நம்மவர்கள் எதனை மிகுதியாக தமது பண்பாட்டடையாளமாக கற்கின்றனர்?கர்நாடக இசையும், பரதநாட்டியமும் இன்றுவரை நம்மவர்களின் கைகளில் வீச்சுடனும் ஆழத்துடனும் வெளிப்பட்டுள்ளது.
இத்தகைய ஒரு பகைப்புலத்தில் ஈழத்தமிழர்களின் மரபான இசை பற்றியும் நடனம் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இசையிலுள்ள ஒத்திசை, ஒழுங்கு, இராகம் என்பன பண்பாட்டுக்கு பண்பாடு வேறுபடும். ஒவ்வொரு இனத்தினிடையேயும் இது தமக்கான தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கும். ஈழத்தமிழினமும் தனக்கான இசைமரபையும் பல தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளது. பண்பாட்டு அடிப்படையில் தமிழ்நாட்டோடு ஈழத்தமிழர்கள் நெருக்கமான தொடர்புகளையும் அடிப்படையான சில ஒற்றுமைகளையும் பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்து வேறுபட்ட தனித்துவமான பல பண்பாட்டு அடையாளங்களை ஈழத்தமிழ்ச் சமூகம் பெற்றுள்ளது. அதில் இசையும், நடனமும் முக்கிய ஒரு கதையாடலாக உள்ளன. இசை ஈழத்தமிழர்கள் மத்தியில் நம்பிக்கைகள் சார்ந்து கிராமிய வழிபாட்டு முறைகளோடு இணைந்ததாகவும், அதே நேரத்தில் இவற்றையெல்லாம் கடந்து வாழ்வியலோடு நெருக்கமான தொடர்புடையதாகவும் உள்ளது. தமிழிசை மரபின் அறாத் தொடர்ச்சியான ஒரு நீட்சியையே நாம் நமது மரபிலும், இசைமரபிலும் காணமுடிகின்றது. சுவாமி விபுலானந்தர் யாழ்நூலை ஆக்கியதற்கான அடிப்படை ஈழத்தமிழர்களிடையே மரபினடிப்படையில் நீண்டிருந்த இசை மரபின் தாக்கமே என்பதை நாம் இங்கு மனங்கொள்ள வேண்டும். அவருடைய இளமைக்காலத்தில் அவர் காதுகளில் ஒலித்த கண்ணகி குளிர்த்தியும், வசந்தன் பாடல்களும், கூத்திசையும் அவரது இசைபற்றிய ஆராச்சிக்கான அடித்தளமாக அமைந்தன.
02.ஈழத்தமிழர்களின் தனித்துவமான இசைமரபுகள் என நாம் அடையாளம் காணக்கூடியவையாக : கரகம், கும்மி, மழைக்காவியம், ஒப்பாரி, வயல்பாடல்கள், அம்பா பாடல்கள், கவி, ஊஞ்சல் பாடல்கள், குளிர்த்திப்பாடல்கள், உடுக்கடி காவியம், காத்தவராயன் பாடல்கள், கோவலன் கதைப்பாடல்கள், கண்ணகி வழக்குரை, மாரியம்மன் நடை, மந்திர உச்சாடன முறைகள், கூத்திசைப்பாடல்கள், ஆட்டக்காவடி இசை, நடைக்காவடி இசை, வேடிக்கைப்பாடல்கள், இஸ்லாமியரின் கல்யாணப்பாடல்கள், பக்கீர் பாடல்கள், கிறிஸ்தவர்களின் சிலுவைப்பாடுகள் பற்றிய பாடல்கள் என நீண்டு செல்லும். இந்த இசைமரபு தங்களுக்கான தனித்துவமான தாள ராக ஒத்திசைவுகளைக் கொண்டுள்ளன. இந்த இசைமரபில் இணைந்திருக்கின்ற இசைக் கருவிகள் முக்கியமானவை.
உடுக்கு:
உடுக்கு இரண்டு வகைப்படும். வெங்கல உடுக்கு எனப்படும் பெரிய உடுக்கு மர உடுக்கு, தேங்காய் சிரட்டைகள் இணைந்த உடுக்கு என இரண்டு வகைப்படுத்தலாம்.
பறைமேளம்:
03.ஈழத்தமிழர் நடனம் என்று நாம் பேசுகின்ற பொழுது கடந்த இரண்டாயிரம் வருடங்களாக தொடர்கின்ற கூத்து மரபையே நாம் கருத்தில் எடுக்க வேண்டும். கூத்து என்பது நடனத்துக்கான தமிழ்ச்சொல். காலப்போக்கில் ஏற்பட்ட சமஸ்கிருத செல்வாக்கு ‘நட்” என்ற சொல்லடியாக வந்த நடனம் என்ற சொல் தமிழ்ச் சொல்லாகவே இன்று பயன்பாட்டில் உள்ளது. ஈழத்தமிழர்களின் நடன மரபென்பது அவர்களது பண்பாட்டு உருவாக்கத்தின் மூலக்கூறுகளில் ஒன்று. ஒரு இனம் தனித்துவமாக பேசப்படுவதற்கு அதற்கான பண்பாட்டு அடையாளங்கள் முக்கியப்படும். அதிலும் குறிப்பாக நடன நாடக வடிவங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. ஈழத்தமிழர்களின் நடன முறைகள் பல்வகைப்பட்ட கூத்து வடிவங்களில் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னியென தமிழர் வாழ் பிரதேசமெங்கும் செறிந்து பரந்துள்ளது.
பறைமேளக்கூத்து:
இது மட்டக்களப்பிலேயே பெருவழக்கில் உள்ளது. இதில் தனியே ஆடல் வடிவம் மட்டுமே. இங்கு பாடல்கள் இல்லை. சொர்ணாளியும், பறையும் அதனோடு சிலம்பும் இணைந்த இசைக்கு பறை வாசிப்பவர்களே ஆடுகின்ற மரபு இதனுடையது. இன்றைக்கு சிங்கவர்கள் மத்தியிலுள்ள கண்டியன் நடனத்திற்கான மூலம் இங்கிருந்துதான் தொடங்குவதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
வசந்தன் கூத்து:
வசந்தன் தனியே பாடலும் ஆடலும் இணைந்த இதில் பாத்திரங்கள் என்றில்லாமல் ஒரு கதையை ஆட்டமுறையின் மூலம் வெளிப்படுத்துவது. சிறுவர்கள் பெரும்பாலும் பங்கு கொள்கின்ற இந்த ஆட்டமுறை பல்வேறு விதமான ஆட்டக் கோலங்களை வெளிப்படுத்தியிருக்கும். இங்கு கதைகூறும் மரபே முக்கியப்பட்டாலும் இதில் ஆட்டமே பிரதானமாக வெளிப்படும்.
மகிடிக்கூத்து:
இதுவும் கதை பாடல் ஆடலெல்லாம் கலந்ததாக இருந்தாலும் பல்வேறு வகையான ஆட்டமுறைகள் பாடல்முறைகளின் இணைவை காணமுடியும். வடமோடி, வசந்தன், தென்மோடி, பிற்காலத்தில் இசையில் வந்து சேர்ந்த விசயங்களென எல்லாவற்றினுடைய கலவையையும் நாம் இங்கு காணமுடியும்.
மன்னார்க் கூத்துக்கள்:
இதில் வடபாங்கு, தென்பாங்கென இரண்டு மரபுகள் காணப்படுகின்றன. வடபாங்கு யாழ்ப்பாண மரபையும், தென்பாங்கு மாதோட்ட மரபையும் வெளிப்படுத்துகின்றன. இக்கூத்துகளில் ஆடல் குறைந்தளவில் வெளிப்பட பாடல்களே பிரதான பங்கு வகிக்கின்றன. ஆனாலும் பாத்திரங்களின் வரவு, தரு என்பன மிகுந்த ஆட்டக் கோலங்களை வெளிப்படுத்தி நிற்கும்.
யாழ்ப்பாணக் கூத்துக்கள்:
வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி பகுதிகளில் வழக்கில் இருந்த மரபு வடமோடிக்கு அண்டித்த சாயலுடையதாக இருக்க கரையோரப் பிரதேசங்களில் உள்ள கூத்துக்கள் தென்மோடியை அண்மித்ததாக உள்ளன. இதேவேளை காத்தவராயன் சிந்து நடைக்கூத்தையும் நாம் யாழ்ப்பாண மரபில் இணைத்துக்கொள்ள முடியும்.
வன்னிக் கூத்துக்கள்:
இங்கு காத்தவராயன் கூத்தும், கோவலன் கூத்தும் முக்கியம் பெறுகின்றன. காத்தவராயன் கூத்து சிந்துநடையும், துள்ளல் தன்மையும், தனித்துவமான இசை மரபையும் கொண்டது. கோவலன் கூத்து மட்டக்களப்பு தென்மோடியின் சாயலை உள்வாங்கிய ஒரு வடிவமாக காணப்படுகின்றது.
வடமோடி, தென்மோடிக் கூத்துக்கள்:
04.இன்று நாம் ஈழத்தமிழரின் நடனம் என்ற ஒரு கருத்துருவாக்கத்தை கொள்வதற்கான அடிப்படைகளை வடமோடி தென்மோடி ஆட்டமுறைகளில் காணலாம். ஆகவே இதனை அடிப்படையாக வைத்தே கடந்த சில ஆண்டுகளாக பேராசிரியர் சு.வித்தியானந்தன் விட்ட இடத்திலிருந்து அடுத்த கட்ட முயற்சிகளை நாம் மேற்கொண்டோம். இந்த முயற்சிகளின் உந்து சக்தியாக போராசிரியர் சி.மௌனகுரு செயல்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 1998ல் கிழக்கு பல்கலைக்கழக நாடக விழாவில் வடிவமைக்கப்பட்ட இன்னிய கருத்துரு, 1999ல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒரு முழுமையை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்றுவரை கிழக்கு பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாக்களில் இன்னிய அணி பயன்படுத்தப்படுகின்றது. இன்னியம் என்பது ஈழத்தமிழர் கலை பாரம்பரிய இசை நடன மரபுகளை இணைத்ததான ஒரு தமிழ்பாண்ட் ( ) என்று சொல்லலாம். நமது அடையாளத்தை தாங்கிய இவ்வகையான ஒரு கலாச்சார இசையணி புலம்பெயர் நாடுகளில் அவசியமான ஒன்றாகும். அவ்வகையில் பிரான்சில் 2008ம் ஆண்டு தைத்திங்களில் நடைபெற்ற தமிழர் திருநாள் என்னும் பொங்கல் விழாவில் இன்னிய அணி அறிமுகப்படுத்தப்பட்டது. பிரான்சின் சிலம்பு அமைப்பின் வழிகாட்டலில் பல்வேறு தமிழர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் இத்தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது. புலம்பெயயர் தேசமொன்றில் இன்னிய அணிக்கு கால்கோல் இட்டது பிரான்ஸ் என்றே கொள்ளலாம். இதில் நடன ஆசிரியை அனுஷாவினையும் அவரது மாணிவியரையும் இணைத்து இன்னிய அணியை வடிவமைத்து அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் இந்த முயற்சியை கருத்தியலாக முன்னெடுப்பதிலும் அறிமுகப்படுத்துவதிலும் தமிழர் திருநாள் நெறியாளர்களுள் ஒருவரான கி.பி.அரவிந்தனினதும், சிலம்பு அமைப்பின் செயலாளரான க.முகுந்தனினதும் பங்களிப்புகள் முக்கியமானவையாகும். தொடர்ந்து 2008 வைகாசித் திங்களில் இலண்டனில் தேம்ஸ் தமிழ்ச் சங்கம் நடாத்திய தமிழர் விளையாட்டு விழாவிலும் இன்னியம் அறிமுகமானது. இலண்டன் வாழ் தமிழ் மாணவர்கள் இதில் பங்கு பற்றினர். திரு.வரன், திரு.சீலன் ஆகிய இருவரின் முயற்சியால் இது சாத்தியமானது. இதன் தொடர்ச்சியாக 2009ம் ஆண்டு நோர்வேயில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் இன்னியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறத்தாழ 50 மாணவர்கள் பங்கேற்றனர். நோர்வே தமிழர்வள நிலையத்தார் இதனைச் செயல்படுத்தினர். இதில் குறிப்பாக பாஸ்கரன், ஆசிரியை மல்லிகா குழுமத்தினர் அக்கறையுடன் செயல்பட்டனர்.
By -’[googleplusauthor]‘
நன்றி – ஆக்கம் – பாலசுகுமார் – முன்னாள் கலைப்பீடாதிபதி, கிழக்கு பல்கலைக்கழகம்.
இக்கட்டுரை பிரான்ஸ் புலம்பெயர் தமிழர் திருநாள் – 2009 சிறப்பு மலரிலிருந்து மீள் பிரசுரமாகின்றது.
http://www.ourjaffna.com/